சாம்பியன்ஸ் டிராபி கொண்டாட்டத்தில் கலவரம்: கைதானவர்களை மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்துவந்த போலீசார்
- நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் டிராபி பட்டம் வென்றது.
- மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டத்தில் வன்முறை வெடித்தது.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்தது.
இரவு 10 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர்.
இந்நிலையில், இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் தலைகளை மொட்டையடுத்து போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.