சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் போலீஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற ரவுடி சுட்டுக்கொலை
- அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
- போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது கொலை, கொள்ளை உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில் ஒரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு அண்டை மாநிலமான சத்தீஷ்காரின் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அமன் சாவ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) தொடர்ந்த வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக அவரை ராய்ப்பூரில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள சிறைக்கு மாற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி ஜார்கண்ட் போலீசார் ராய்ப்பூர் சென்று, அமன் சாவை போலீஸ் வாகனத்தில் ஏற்றி ராஞ்சிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
ராஞ்சியில் இருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள பலாமு மாவட்டத்தின் செயின்பூர் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அமன் சாவின் கூட்டாளிகள் அவரை தப்ப வைப்பதற்காக போலீஸ் வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.
அமன் சாவின் கூட்டாளிகள் வீசிய குண்டு போலீஸ் வாகனத்தின் முன்பு விழுந்து வெடித்தது. இதனால் போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அதை தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை பயன்படுத்தி அமன் சாவ், போலீஸ்காரர் ஒருவரின் துப்பாக்கியை பறித்து போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் அமன் சாவ் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அதை தொடர்ந்து அமன் சாவின் கூட்டாளிகள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காயம் அடைந்த போலீஸ்காரர் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.