வாக்காளர் பட்டியல் விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
- ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
- கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு.
புதுடெல்லி:
போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை எழுப்பினார்.
கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாக்காளர் பட்டியல் இந்திய பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குகள் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துமாறும் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்படும் ஆலோசனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.