100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார் - தர்மேந்திர பிரதான்
- தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.
- பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல
நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில்,இன்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் குறித்து பேசியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திமுக எம்.பி. திருச்சி சிவாவுக்கும் தர்மேந்திர பிரதானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநிலங்களவையில் பேசிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல. அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்தவர்கள் எனக்கு பாடம் எடுப்பதா?" என்று தெரிவித்தார்.