ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜி.எஸ்.டி. அதிகாரியின் உதவியாளர் கைது
- மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது.
- லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தலைமறைவாகிவிட்டார்.
மும்பை:
பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் நபர் ஒருவரிடம் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ஜி.எஸ்.டி. அதிகாரியை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணம் கொடுக்க ஒப்புக்கொள்வதாக கூறும்படி கூறியுள்ளனர். அதன்படி புகார்தாரரும் ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவை தொடர்புகொண்டு பணத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.
இதன்பேரில் மும்பை அந்தேரியில் உள்ள ஓட்டலில் வைத்து பணப்பறிமாற்றம் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி புகார்தாரர் பணத்துடன் ஓட்டலுக்கு சென்றார். ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை கமிஷனர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.