செய்திகள்

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: பணப் பட்டுவாடாவை தடுக்க ரகசிய குழுக்கள் அமைக்கப்படுமா?

Published On 2017-11-24 11:09 IST   |   Update On 2017-11-24 11:09:00 IST
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பணப் பட்டுவாடாவை தடுக்க ரகசிய குழுக்கள் அமைத்து கண்காணிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை:

ஜெயலலிதா காலமானதால் காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31-ம்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.



இதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி டெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனையைத் தொடங்கி உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களிடையே நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணப் பட்டுவாடா செய்தது கண்டறியப்பட்டதால், கடைசி நேரத்தில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்த முறையும் பணப் பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க உள்ளது.

பெரும்பாலும் பணப் பட்டுவாடா என்பது நள்ளிரவிலோ அல்லது அதிகாலை வேளையிலோ நடைபெறுகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஆட்களைக் கணக்கெடுத்து வைத்துக்கொள்கின்றனர்.  எனவே, ஒவ்வொரு தெருவிலும் பணம் பட்டுவாடா செய்யும் நபர்கள் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து அவர்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் தனி படையை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News