செய்திகள்

கருத்து தெரிவிக்க உரிமை இல்லாதது நெருக்கடி நிலையை காட்டுகிறது- வைகோ

Published On 2018-07-08 12:54 IST   |   Update On 2018-07-08 12:55:00 IST
8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லாதது நெருக்கடி நிலையை காட்டுகிறது என்று வைகோ கூறினார். #MDMK #Vaiko
திருச்சி:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை தி.மு.க. ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. ம.தி.மு.க.வின் நிலைப்பாடும் அதுதான். பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது. பாராளுமன்றத்துக்கு ஒரு அணிக்கு வாக்களித்த மக்கள் மாநில தேர்தல் வரும் போது மாற்றி அளிக்க வாய்ப்பு உள்ளது.

பல தேசிய இனங்களை கொண்ட இந்திய உப கண்டத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே கிடையாது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம், ஒரு கலாசாரம் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜனநாயகத்தை புல்டோசர் கொண்டு தகர்க்க பார்க்கிறார். சர்வாதிகார போக்குடன் கூடிய அவருடைய மனோபாவம் ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது.


சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரை கைது செய்து இருப்பது கண்டனத்துக்குரியது. தங்களது தாய் மண்ணை விட்டு கொடுக்க முடியாத சேலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க கூட உரிமை இல்லை என்பது நெருக்கடி கால நிலையை தான் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko
Tags:    

Similar News