பொள்ளாச்சியில் டாக்டர் வீட்டில் 136 பவுன் நகை- ரூ.3 லட்சம் பணம் கொள்ளை
- வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
- கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலை, ரத்தினம் நகரை சேர்ந்தவர் கார்த்திக். பல் மருத்துவராக உள்ளார்.
இவர் பொங்கலையொட்டி வெளியூரில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மறுநாள் காலையில் பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது டாக்டர் வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் உடனடியாக கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்டு கதவு திறந்து இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து டாக்டர் கார்த்திக் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்ததுடன், அதில் உள்ள துணிமணிகள், பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் அதில் வைத்திருந்த 136 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணம் மாயமாகி இருந்தது. கார்த்திக் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கார்த்திக் உடனடியாக மகாலிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீஸ் டி.எஸ்.பி. சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.