அவினாசியில் ஒரே அறையில் 2 மாணவிகள் தற்கொலை: வேறு ஏதேனும் காரணமா? விசாரணை
- தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை லட்சுமி நகா் பகுதியை சோ்ந்தவா் மருதாசலமூா்த்தி. இவரது மகள் அவந்திகா (வயது 19). அவிநாசி கங்கவா் வீதியைச் சோ்ந்த ரமேஷ் மகள் மோனிகா (19). இவா்கள் இருவரும் திருமுருகன்பூண்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தனா். மேலும் இருவரும் பகுதி நேரமாக அங்குள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவந்திகா வீட்டுக்கு மோனிகா சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது உள்ளே அவந்திகா, மோனிகா இருவரும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவந்திகா, மோனிகா இருவரும் கல்லூரி மற்றும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள். படிக்கும் போதும் ஒன்றாகவே இருந்து படிப்பார்கள். ஆனால் அவர்களது பெற்றோர் ஒன்றாக இருந்து படித்தால் சரியாக படிக்கமாட்டீர்கள். எனவே தனித்தனியாக இருந்து படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இதனால் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று பயந்த 2 பேரும் தற்கொலை செய்துள்ளது போலீசார் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.