செய்திகள்

தி.மு.க. தோல்விக்கு காரணம் என்ன?: திருமாவளவன் பேட்டி

Published On 2016-06-07 13:40 IST   |   Update On 2016-06-07 13:41:00 IST
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் விலகப்போவதாக கூறப்படுகிறதே?

பதில்:- தே.மு.தி.க.வும், த.மா.கா.வும் மக்கள் நலக் கூட்டணியோடு கடந்த சட்டசபை தேர்தலில் தொகுதி உடன்பாடு வைத்து கொண்ட அவர்கள் மக்கள் நலக்கூட்டணியில் ஒரு அங்கமாக இணையவில்லை. எனவே அவர்கள் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுதந்திரமாக முடிவு எடுக்க உரிமை உண்டு. ஆனால் இந்த 6 கட்சி கூட்டணியும் தொடர வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் விருப்பமாகும்.

கே:- உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் இல்லை என்று நீங்கள் கூறினீர்களா?

ப:- உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையுமா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்குமே உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் இருக்காது என்று தான் சொன்னேன். கடந்த காலங்களில் அவர்கள் உள்ளாட்சி தேர்தலை சந்தித்து இருக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி அவசியம் இல்லை என்று நான் கூறவில்லை.

கே:- தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உங்கள் 6 கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார்களா?

ப:- ஏற்கனவே எங்கள் கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆகவே அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பது தான் விடுதலை சிறுத்தையின் விருப்பம். 6 கட்சிகளும் இணைந்து இந்த 3 தேர்தல்களையும் சந்திக்க வேண்டும்.

கே:- விடுதலை சிறுத்தைகளை தி.மு.க. கூட்டணியிலேயே வைத்திருந்தால் தி.மு.க. ஆட்சியை பிடித்திருக்கும் என்று நீங்கள் பேசியதாக தெரிகிறதே?

ப:- வானூர் தொகுதியில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசும் போது இது குறித்து ஒரு கருத்தை நான் பதிவு செய்தேன். அதாவது கூட்டணி ஆட்சி முறைக்கு தி.மு.க. உடன்பட்டு இருந்தால் விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணி பக்கம் வந்திருக்க மாட்டார். தி.மு.க.வுடன் சேர்ந்து இருப்பார். கட்டாயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கும் என்றுதான் அந்த கூட்டத்தில் பேசினேன்.

கே:- உங்கள் கூட்டணியால் தான் தி.மு.க. ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதா?

ப:- அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி சிதற வைத்து விட்டது என்று யாரும் பேசுவது இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி, தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையாக செலவு செய்தது. ஆனால் பா.ம.க.வை அ.தி.மு.க.வின் ‘பினாமி டீம்’ என்று யாரும் சொல்லவில்லையே ஏன்? மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைக்க தவறியது எங்கள் குற்றமில்லை.

கே:- தி.மு.க. உங்களை அழைக்கவில்லை என்பதால் தான் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினீர்களா?

ப:- அப்படி இல்லை.... மாற்று அரசியலை முன் வைத்த போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் இருந்தோம். நாங்கள் வெளியேறவும் இல்லை. வெளியேற்றப்படவும் இல்லை.

அப்போது தி.மு.க. தனித்தே ஆட்சியை பிடித்து விட முடியும் என்ற நோக்கில் செயல்பட தொடங்கியது. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் தடுப்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஆகவே தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைக்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி தான் இந்த அணி வடிவம் பெருவதற்கு காரணமாக அமைந்தது. வேறு எந்த உள்ளோக்கமும் விடுதலை சிறுத்தைக்கு இல்லை.

கே:- நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டா?

ப:- பொதுவாக கூட்டணி அமைப்பதில் பெரிய கட்சிகளின் விருப்பங்களும் கணிப்புகளும் தான் அடிப்படையாக அமைகின்றன. எங்களைப் பொறுத்த வரை பாராளுமன்ற தேர்தல் குறித்து இப்போதைக்கு எதுவும் சிந்திக்கவில்லை. ஆனால் இந்த கூட்டணியே தொடர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கே:- உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டியிடுமா?

ப:- எங்கள் 6 கட்சி கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர வேண்டும். ஆனால் உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்த வரையில் கூட்டணி இல்லாமலும் போட்டியிடலாம். இது ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள சுதந்திரமாகும்.

ஆனால் உள்ளூர் சூழல்களைப் பொறுத்து தனித்துப் போட்டியிடலாம். அது நாடாளுமன்ற தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News