செய்திகள்

இந்த மாதத்திலேயே 3 தடவை பழுதடைந்த ஏ.என்.32 ரக விமானம்

Published On 2016-07-23 11:55 IST   |   Update On 2016-07-23 11:56:00 IST
விபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானம் இந்த மாதத்தில் மட்டும் 3 தடவை பழுந்தடைந்தது.
சென்னை:

ஏ.என்.32 ரக விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது, 25 ஆண்டு பழமையானது. விபத்துக்குள்ளான விமானம் இந்த மாதத்தில் மட்டும் 3 தடவை பழுந்தடைந்தது.

தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து சென்று விபத்துக்குள்ளான ஏ.என்.32 ரக விமானம் ரஷியாவில் தயாரிக்கப்பட்டது. 2 என்ஜின்கள் கொண்டது.

மோசமான வானிலையில் கூட மீண்டும் எரிபொருள் நிரப்பாமல் 4 மணி நேரம் பறக்கக்கூடியது. மிகவும் சக்தி வாய்ந்தது. மலை சிகரங்கள், பாலைவனங்களில் ராணுவத்தினருக்கான பொருட்களை சப்ளை செய்வதற்காக தயாரிக்கப்பட்டது.

இது போன்ற 100 விமானங்களை ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கியது. தற்போது இந்த விமானங்கள் அனைத்தும் பழமையாகி விட்டன.

நேற்று விபத்துக்குள்ளான விமானம் விமானப் படையில் சேர்க்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இன்னும் 2, 3 மாதத்தில் இந்த விமானம் ஓய்வு பெற இருந்தது. பழமையானது என்பதால் அடிக்கடி கோளாறு ஏற்பட்டது. அதை விமானப்படை என்ஜினீயர்கள் சரி செய்து இயக்கி வந்தனர்.

இந்த மாதத்திலேயே இது 3 தடவை பழுதாகி அது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் நேற்று மீண்டும் பழுதாகி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே இதுபோன்ற ஏ.என்.32 ரக விமானப்படை விமானம் 1999-ம் ஆண்டு டெல்லி அருகே விபத்துக்குள்ளாகி 21 பேர் பலியானார்கள்.

அடுத்து 2009-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியானார்கள்.

பழமையான ஏ.என்.32 ரக விமானம் இன்னும் மிக குறைந்த எண்ணிக்கையில் விமானப்படையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News