செய்திகள்

மாதவரம் அருகே ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய 6 பேர் கைது

Published On 2016-07-23 11:56 IST   |   Update On 2016-07-23 11:56:00 IST
மாதவரம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் ஆட்டோவில் கத்தியுடன் சுற்றிய 6 பேரை கைது செய்தனர்.
மாதவரம்:

மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாதவரம் பால் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் மற்றும் போலீசார் மாதவரம் அடுத்த சின்னமாத்தூரில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு ஆட்டோ வந்தது. போலீசார் ஆட்டோவை நிறுத்த முயன்றனர். ஆனால் அது நிற்காமல் சென்று விட்டது. உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.

ஆட்டோவில் 6 வாலிபர்கள் இருந்தனர். ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 3 பெரிய பட்டா கத்திகள் இருந்தது. உடனே போலீசார் 6 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் திருவொற்றியூரை சேர்ந்த சிலம்பரசன் (23), மோகன் (22), செல்வம் (20), மகேஷ், பிரபு மற்றும் எண்ணூரை சேர்ந்த வீரபிரபு என்பது தெரிய வந்தது.

இவர்கள் 6 பேரும் யாரையும் கொலை செய்யும் நோக்கில் ஆட்டோவில் சென்றார்களா? அல்லது வழிப்பறி கொள்ளை திட்டமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் சிலம்பரசனும், வீர பிரவும் எண்ணூர் போலீசில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று முன் தினம் தான் சிறையில் இருந்து வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 6 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News