செய்திகள்
கடலாடி அருகே 3 குடிசைகள் எரிந்து சாம்பல்
கடலாடி அருகே கன்னிகாபுரி கிராமத்தில் தீப்பிடித்து 3 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
கடலாடி:
கடலாடி அருகே உள்ள கன்னிகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்கள் லூர்துமார்ட்டின் (வயது50), பரிசுத்தம் (45) மற்றும் பங்குராஜ் மகன் சேசுமுத்து (35). இவர்களின் குடிசை வீடு அருகருகே உள்ளது.
நேற்று முன்தினம் இரவு பரிசுத்தம் வீட்டில் மண்எண்ணை விளக்கை எரிய விட்டுவிட்டு வீட்டில் உள்ளோர் தூங்கி விட்டனர். காற்றில் விளக்கு கீழே விழுந்து குடிசையில் மளமளவென தீப்பற்றியதுடன் அருகாமையில் இருந்த இரு குடிசை வீடுகளிலும் தீ பரவி எரிந்து சாம்பலாகின.
அதிருஷ்டவசமாக மூவரது வீட்டினரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். எனினும் மூன்று வீடுகளிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து முற்றிலும் சாம்பலாகின.
இது குறித்து தகவலறிந்த சாயல்குடி வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு கடலாடி தாசில்தார் ஜெயக்குமாருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.