செய்திகள்

கரூரில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2016-07-23 17:18 IST   |   Update On 2016-07-23 17:18:00 IST
கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை கலெக்டர் காகர்லா உஷா கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

கரூர்:

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை முதுநிலை மாவட்ட கலெக்டர் காகர்லா உஷா கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை இட்டுச்சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் தொகை விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் தாந்தோன்றி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலெக்டர் கலந்து கொண்டு பேசியதாவது:–

இக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்கள் தொகைப்பெருக்கத்தின் அபாயத்தை உணர வைக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டு தோறும் உலக மக்கள் தொகை தினம் மாவட்ட அளவில் மற்றும் வட்டார அளவில் கொண்டாடப்படுகிறது. எதிர்கால வாழ்வின் வளம் பற்றியும் அதை பாதிக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம் பற்றியும் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கத்தை சிறப்புற கட்டுப்படுத்துவதற்கு மக்களிடையே குடும்பநல விழிப்புணர்வை ஏற்படுத்தி, மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த தேவையான குடும்ப நலமுறைகளை மக்களை கடைபிடிக்க செய்து, மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது இத்தினத்தை அனுசரிப்பதன் நோக்கமாகும்.

இவ்வருடம் நாம் 27–வது உலக மக்கள் தொகை தினத்தை அனுசரிக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக வைத்து அனுசரிக்கின்றோம். இந்த ஆண்டு கருத்து யாதெனில், “பொறுப்புகளை நிறைவேற்ற திட்டமிடுங்கள்” என்பதாகும். தமிழ்நாட்டில், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 1 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 148 மனிதர்கள் வாழ்ந்தனர். இன்று அதே நிலப்பரப்பில் 555 மனிதர்கள் வாழ்கின்றனர்.இதன் பொருட்டு ஆண்களும், குடும்ப நலத்தில் பங்கு கொண்டு தற்பொழுது மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள நவீன முறையில் எந்த வித பாதிப்பும் இல்லாத ஆண் நவீன குடும்ப நல சிகிச்சை (என்.எஸ்.வி) முறைகளை ஏற்று பெண்களின் குடும்ப சுமையை குறைத்து நாடு நலம் பெற மேற்கண்ட சிறு குடும்ப நெறிமுறைகளை பின்பற்றி, பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஆண்களும் முன்வர வேண்டும்.

குடும்பத்தில் அங்கத்தினர்கள் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போவதால் சமுதாயத்தில் நிலம், நீர், காற்று, சுற்றுச்சூழல் பாதித்து நம் வாழ்வாதாரத்தையும், அத்தியாவசிய தேவைகளையும் பாதிக்கிறது. வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

பெருகி வரும் மக்கள் தொகையில் அடுத்த 20 ஆண்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் என வல்லுநர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பெருகி வரும் வாகனங்களினால் காற்று மண்டலம் மாசு படுகிறது. இதனால் வெப்பம் உயர்ந்து கொண்டே போகிறது. சீதோஷ்ண மாற்றங்களுக்கும் இது காரணமாகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் விளை நிலங்கள் குடியிருப்பு களாக மாறி உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கோமகன், நலப்பணிகள் இணை இயக்குநர்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) ரமேஷ்குமார், அரசு கலைக்கல்லூரி முதல்வர் ((பொறுப்பு) பழனிச்சாமி, மாவட்ட மக்கள் கல்வி தகவல் தொடர்பு அலுவலர் பிரான்ஸிஸ்கோ பிருந்தா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News