செய்திகள்

இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல் கடிதம்

Published On 2016-07-26 11:32 IST   |   Update On 2016-07-26 11:32:00 IST
தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக உள்ள வீணை காயத்ரிக்கு மர்மநபர்கள் விடுத்த கொலை மிரட்டல் கடித்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் வீணை காயத்ரி.

பல்கலைகழக வளாகத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் நேற்று மர்ம கும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி போட்டு உடைத்தது. அருகில் உள்ள 4 அறைகளையும் அக்கும்பல் சூறையாடியது. பல்கலை கழக உணவகத்தில் புகுந்தும் பொருட்களை சூறையாடினர். பின்னர் அங்கேயே சிறுநீர் கழித்தும் அசிங்கம் செய்தனர்.

வீணை காயத்ரியின் அலுவலக அறையின் மேஜையில் மர்ம கும்பல் கொலை மிரட்டல் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து விட்டு சென்றது. அதில், நாங்கள்தான் உனக்கு சாவு மணி அடிக்கப்போகிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுபற்றி வீணை காயத்ரி, பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சில பைல்களும் மாயமானது தெரியவந்தது.

இசைக்கல்லூரியில் ‘சீட்டுகேட்டு வந்த சிலர் வீணை காயத்ரியிடம் சில நாட்களுக்கு முன்னர் தகராறில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. எனவே அவர்கள்தான் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மயிலாப்பூர் துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் மர்ம கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகிறார்கள்.

Similar News