செய்திகள்

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த சிறுவன் பலி: மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை

Published On 2016-10-03 07:22 IST   |   Update On 2016-10-03 07:22:00 IST
சென்னை பல்லவன் சாலை குடியிருப்பு பகுதியில் அறுந்துகிடந்த மின் வயரை மிதித்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சென்னை :

சென்னை பல்லவன் சாலை காந்திநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியிருக்கக்கூடாது என்று அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்து வருபவர்களுக்கு, கண்ணகிநகர், துரைப்பாக்கத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி தொடர்ந்து இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்துவருபவர் பெருமாள், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி, மகன்கள் சஞ்சய், சந்தோஷ், மகள் சர்மிளா. இதில் சஞ்சய் (வயது 13) ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தான்.

சஞ்சய் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அருகில் உள்ள மின்சார பெட்டியில் இருந்து அறுந்துகிடந்த மின் வயரை சஞ்சய் கவனிக்காமல் மிதித்துவிட்டான். இதில் சஞ்சய் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டான்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவனை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்லவன் சாலை பகுதியில் வாழ்ந்துவருபவர்கள் அங்கிருந்து செல்ல மறுப்பதால், அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனாலும் மின்சார பெட்டியில் இருந்து திருட்டுத்தனமாக வயர்களை இணைத்து மின்சாரம் திருடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதுபோன்ற ஒரு வயர் சரியாக பொருத்தப்படாதது தான் சஞ்சய் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே இதுதொடர்பாக மின்சார வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News