செய்திகள்

விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி: எடப்பாடி பழனிசாமி

Published On 2017-04-04 13:12 IST   |   Update On 2017-04-04 13:12:00 IST
விபத்துகளில் பலியான 15 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்டம், சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த ரோணித் கிருஷ்வான்; விழுப்புரம் மாவட்டம், தடாகம் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் மற்றும் ராஜவேல்; திருவள்ளூர் மாவட்டம், பெரியகளட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் மற்றும் வினித் மற்றும் பிளேஸ்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமுவேல்.

வேலூர் மாவட்டம், புதூர் நாடு, சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜி மற்றும் வெங்கட்டராமன்; ஈரோடு மாவட்டம், புன்னம் கிராமத்தைச் சேர்ந்த மினியப்பனின் மனைவி இருளாயி; ஆகியோர் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம், சிங்கித்துறையைச் சேர்ந்த அருள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.


காஞ்சிபுரம் மாவட்டம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கடப்பாக்கம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேலு ஆகியோர் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்து உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதூளை கிராமத்தைச் சேர்ந்த சக்காத்து மற்றும் பாலு ஆகிய இரு மீனவர்களும் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் சுனாமிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்து உயிரிழந்தார் என்ற செய்திகளையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

படகு கவிழ்ந்து உயிரிழந்த மீனவர்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Similar News