செய்திகள்

ஆர்.கே.நகர் மக்களின் பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காண்பேன்: தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ்

Published On 2017-04-04 15:40 IST   |   Update On 2017-04-04 15:40:00 IST
ஆர்.கே.நகர் மக்களின் பிரச்சனைக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும் என தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் கூறியுள்ளார்.
ராயபுரம்:

ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

கொளுத்தும் வெயிலில் வீடு வீடாக நடந்து சென்று ஆதரவு திரட்டும் வேட்பாளர் மருதுகணேசுக்கு அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேட்பாளர் மருது கணேஷ் இன்று காலை காசிபுரம், ஜீவரத்தினம் சாலை, புதுமனைகுப்பம், தண்டையார்பேட்டை மார்க்கெட்பகுதி, கனகா தெரு, விநாயகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தின்போது வேட்பாளர் மருதுகணேஷ் பொது மக்களிடம் பேசுகையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக தீர்வு காண்பேன்.

இதே பகுதியில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

மீனவர்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மீன் மார்க்கெட் அமைக்க பாடுபடுவேன். மண்ணின் மைந்தனாகிய என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

வேட்பாளருடன் தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினர்.

Similar News