செய்திகள்

தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான அரசு பஸ்கள் ஓடவில்லை: பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு

Published On 2017-05-15 12:00 IST   |   Update On 2017-05-15 14:42:00 IST
ஊதிய ஒப்பந்தம், நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

13-வது ஊதிய ஒப்பந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க உடனே ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் மே 15-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து அரசுப் போக்குவரத்துக்கழக தொழிற் சங்கத்தினருக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடந்த சில தினங்களாக 7 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இறுதியாக நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும் சமரசம் ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை திங்கட் கிழமை காலை முதல் தொடங்கப்போவதாக அரசு போக்குவரத்து கழக தொழிற் சங்கங்கள் அறிவித்தன.

சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 11 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. நேற்று பிற்பகலில் இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழ்நாடு முழுவதும் உடனடியாக முன் கூட்டியே காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.

இதற்கிடையே தொழிற்சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவியதால் ஸ்டிரைக் தீவிரமானது. நேற்று மாலை தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் நிறுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் 8 மண்டலங்கள் உள்ளன.

இந்த 8 மண்டலங்களிலும் நேற்று மாலை பஸ்கள் இயக்கம் முடங்கியது. சென்னையில் பல்லவன் சாலையில் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டன. மந்தை வெளி, சைதாப்பேட்டை டெப்போக்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.



சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் நேற்று மாலை 80 சதவீதம் நிறுத்தப்பட்டன. ஸ்டிரைக் திங்கட்கிழமை காலை தானே தொடங்குகிறது. அதற்குள் ஊருக்கு சென்று விடலாம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கோயம்பேடுக்கு வந்திருந்தனர். ஆனால் பஸ்கள் ஓடாததால் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சீபுரம், கரூர், திருவள்ளூர் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நேற்று மாலையே 80 சதவீத பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல ஊர்களில் பஸ்களை இயக்க டிரைவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பஸ்களை இயக்க டிரைவர்கள் மறுத்து விட்டனர். அனைத்து பஸ்களையும் தொழிற்சங்கத்தினர் டெப்போக்களில் நிறுத்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் மேலும் தீவிரமானது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கெல்லாம் அரசு பஸ் டிரைவர்கள் டெப்போக்களுக்கு வந்து தங்கள் பணியைத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்று அதிகாலை எந்த பஸ்சும் வெளியில் எடுக்கப்படவில்லை.

8 போக்குவரத்து மண்டலங்களிலும் சுமார் 5 முதல் 10 சதவீத பஸ்கள்தான் வெளியில் எடுக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவை இயக்கப்பட்டன. 90 சதவீத அரசு பஸ்களின் சேவை முடங்கியது.

சென்னையில் மக்களின் அன்றாட செயல்பாட்டுக்கும் தொழிலாளர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மாநகர அரசு பஸ்களின் சேவைதான் பிரதானமாக உள்ளது. சென்னையில் 37 டெப்போக்கள் உள்ளன. அங்குள்ள பஸ் சேவைகளில் இன்று 90 சதவீதம் முடங்கியது. மாநகர பஸ்கள் குறைந்த அளவு இயக்கப்பட்டதை காண முடிந்தது.

சென்னையில் மாநகர பஸ்கள் சுமார் 3300 உள்ளன. இதில் 90 சதவீதம் இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தப்பட்டன. சென்னை புறநகர் சேவையும் நடைபெறவில்லை. அது போல புறநகர்களில் இருந்து சென்னைக்குள் வரும் அரசு பஸ் சேவைகளும் முழுமையாக முடங்கின.

சென்னை, திருச்சி, மண்டலத்தில் அதிக அளவில் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் ஓடாததால் தமிழ்நாடு முழுவதும் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். சென்னையில் இருந்து பகல் நேரத்தில் வெளியூர் செல்பவர்கள் தவிக்க நேரிட்டது.

அதுபோல வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் சென்னை வர முடியாமல் அவதிக்குள்ளானார்கள். அரசு பஸ்கள் ஓடாததால் தனியார் பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.



சென்னையில் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் நேற்று மாலை 4 மணி முதல் கடும் அவதியை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இன்று காலை அலுவலகங்களுக்கு செல்பவர்கள் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், வாடகை கார்களில் சென்றனர். பெரும்பாலான இடங்களில் ஆட்டோக்களுக்கு பயணிகள் இரு மடங்கு கட்டணம் கொடுக்க வேண்டியதிருந்தது.

சென்னையில் தனியார் பஸ் போக்குவரத்து இல்லை என்பதால் மற்ற நகரங்களை விட சென்னையில் பொதுமக்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து மினி பஸ்களும், தனியார் பஸ்களும் சென்னைக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேருந்துகளை இயக்க வந்தவர்களை தடுப்பவர்களை எதிர்கொள்ளும் வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில ஊர்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பல ஊர்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 8 மண்டலங்களிலும் சுமார் 22 ஆயிரம் அரசு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் தினமும் சராசரியாக 2 கோடி பேர் பயணம் செய்வார்கள். இன்று சில ஆயிரம் பேர் தான் பயணம் செய்தனர். இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு இன்று கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நகரங்களில் இருந்து கிராமப்புற சேவைகள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். அவை அனைத்தும் இன்று இழப்பாகி விட்டன.

இதற்கிடையே இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது. தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் யாசீன்பேகம் 10 தொழிற்சங்கங்களுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் நலன் கருதி இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் தீர்வு எட்டப்படுமா? என்பது இன்று மாலை தெரியவரும்.

Similar News