செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிறகு ஜெயலலிதா, சசிகலாவின் 68 சொத்துகள் நீதிபதி முன்னிலையில் ஏலம் விடப்படும்

Published On 2017-05-31 11:00 IST   |   Update On 2017-05-31 11:01:00 IST
பறிமுதல் செய்யப்பட்ட பிறகு ஜெயலலிதா, சசிகலாவின் 68 சொத்துகளை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் அரசு உத்தரவுக்கேற்ப சொத்துகளை பராமரிப்பார்கள் அல்லது ஏலம் விட ஏற்பாடு செய்வார்கள்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீதும் வரு மானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக வழக்குகள் தொடரப்பட்டது.



இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெங்களூர் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.

தண்டனை பெற்றவர்களில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அவரது சொத்துகளை கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 128 சொத்துகள் முடக்கப்பட்டன. அதில் ஜெயலலிதா-சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த 68 சொத்துகளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. அந்த 6 மாவட்ட கலெக்டர்களும் அந்த சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா, சசிகலாவின் சொத்துகள் எப்படி பறிமுதல் செய்யப்படும்? அவை அடுத்த கட்டமாக என்ன செய்யப்படும் என்பது பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

6 மாவட்ட கலெக்டர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள ஜெயலலிதா, சசிகலாவின் சொத்துகள் பற்றி முதலில் ஆய்வு செய்வார்கள். பிறகு அந்த சொத்துகள் சட்டப்படி கையகப்படுத்தப்படும். அந்த சொத்துகளை கண்காணிப்பதற்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள்.

மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சிறப்பு தாசில்தார் அந்தஸ்தில் இருப்பவர் தனி அதிகாரியாக நியமனம் செய்யப்படுவார். அவர்கள்தான் அரசு உத்தரவுக்கேற்ப அந்த சொத்துகளை பராமரிப்பார்கள். அல்லது ஏலம் விட ஏற்பாடு செய்வார்கள்.

சொத்துகள் இருக்கும் இடங்கள் அரசுக்கு தேவைப்பட்டால் அவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இல்லையெனில் அவை ஏலம் விடப்படும். கோர்ட்டு உத்தரவு படி மாவட்ட நீதிபதி மற்றும் கலெக்டர் முன்னிலையில் ஏலம் விடப்படும்.

ஏலம் விடப்படும் சொத்துகள் மீது கடன் இருந்தால் அவை சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Similar News