செய்திகள்

தூத்துக்குடியில் மாணவர் விபத்தில் பலி: டிராக்டர் டிரைவர் கைது

Published On 2017-05-31 15:01 IST   |   Update On 2017-05-31 15:01:00 IST
தூத்துக்குடியில் மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து டிராக்டர் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
முள்ளக்காடு:

தூத்துக்குடி அத்திமரப்பட்டி அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மகன் நிதிஷ்குமார் (வயது 17). பாலிடெக்னிக் மாணவரான இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பேச்சிமுத்து என்பவருடன் ஸ்பிக் நகரில் இருந்து அத்திமரப்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பேச்சிமுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கோரம்பள்ளம் அருகே உள்ள வடக்கு காளான்கரையை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவர் டிராக்டர் ஓட்டி சென்றபோது விபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News