செய்திகள்
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் எம்.பி.பேசிய காட்சி.

என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா?: அன்புமணி ராமதாஸ்

Published On 2017-06-12 09:45 IST   |   Update On 2017-06-12 09:45:00 IST
நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம், வருவார் என பேசப்பட்டவர்; என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அரசியலுக்கு வருவாரா? என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
ஈரோடு:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் நாடு முழுவதும் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன.

இந்த தீர்ப்புக்கு காரணமாக வழக்கை தொடர்ந்து வெற்றி பெற்ற டாக்டர் ராமதாசுக்கு ஈரோட்டில் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே பாராட்டு வெற்றி விழா பொது கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பொ.வை.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணியும், இளைஞர் சங்க மாநில தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில் வாழும் பெரியார் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இதை பொதுக்கூட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். சில நாட்களுக்கு முன்னால் ஈரோட்டில் நதிநீர் மாநாடு நடந்தது. அங்கு வந்திருந்த மக்களை விட இங்கு மூன்று மடங்கு மக்கள் அதிகமாக வந்துள்ளனர். எனவே இது மாநாடு போன்றது.

32 மாவட்டங்களுக்கு சென்று லட்சக்கணக்கான பெண்களை திரட்டி மதுவுக்கு எதிராக நான் போராட்டம் நடத்தியுள்ளேன். அடுத்த முறை நான் ஈரோடு வரும் போது பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும். அப்போது தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி நடக்கும். 3321 மதுக்களும், இந்தியாவில் 90 ஆயிரம் மதுக்கடைகளும் பா.ம.க.தொடர்ந்த வழக்கு மூலம் மூடப்பட்டுள்ளன. இது பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.

இந்தியாவிலேயே மதுவுக்கு எதிராக முதன் முதலில் போராட்டம் ஈரோட்டில் தான் நடந்தது. 36 ஆண்டு காலமாக மதுவுக்கு எதிராக போராடி இன்று அதில் வெற்றி கண்டவர் தான் ராமதாஸ். இன்று யார் யாரோ மதுவிலக்கு பற்றி பேசுகிறார்கள்.

50 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு கட்சிகளும் மதுவை விற்று பிழைப்பு நடத்தியது. 50 ஆண்டுகளில் இரண்டு திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை.


ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., தீபா, தீபக், தினகரன் தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? ஸ்டாலின் ஊடகங்களால் முன்நிறுத்தி வைக்கப்பட்ட தலைவர். அவர் இதுவரை என்ன செய்துள்ளார்? கலர் கலராக சட்டையை போடுவார். இல்லை சட்டையை கிழிச்சு போடுவார். ஸ்டாலின் மதுக்குறித்து பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது. அது பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கல்யாணம் நடக்கும் போதே அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். பின்னர் என் மகள் கல்யாணம் நடந்த போது அவர் அரசியலுக்கு வரலாம். வருவார் என்றனர். ஆனால் வரவில்லை. போகிற போக்கை பார்த்தால் என் பேரன் கல்யாணம் நடக்கும் போதாவது அவர் அரசியலுக்கு வருவாரா? தெரியவில்லை.

ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி வீட்டு முன்பு போராடியவன் நான். அதனால் போராட்டம் என்பது எனக்கு புதிதல்ல

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News