இந்தியா

ஜல்கான் ரெயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.1.5 லட்சம் - ரெயில்வே துறை அறிவிப்பு

Published On 2025-01-23 08:40 IST   |   Update On 2025-01-23 09:42:00 IST
  • நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் 12 பயணிகள் பலியாகினர்.
  • ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி 'லக்னோ-மும்பை புஸ்பக்' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 5 மணி அளவில் மகாராஷ்டிரத்தில் உள்ள ஜல்கான் மாவட்டத்தில் வந்து கொண்டு இருந்தது.

பச்சோரா என்ற இடத்தை நெருங்கியபோது ரெயிலின் பெட்டி ஒன்றில் தீப்பொறி பறந்ததாக தெரிகிறது. இதனால் ரெயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக பயணிகள் இடையே வதந்தி பரவியது. ரெயிலில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர். அப்போது, பயணி ஒருவர் பயத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால் 'புஸ்பக்' ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. மகேஜி மற்றும் பர்தாடே ரெயில் நிலையங்களுக்கு இடையே நின்ற ரெயிலில் இருந்து உயிர் பயத்தின் காரணமாக பயணிகள் பலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்தனர்.

அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பயணிகள், தண்வாளத்தை கடந்துவிட முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரெயில, தண்டவாளத்தில் நின்றவர்கள் மீது மோதிச் சென்றது.

விபரீதமாக நடந்த இந்த விபத்தில் சிக்கியவர்களில் சிலரது உடல்கள் சிதறி நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டன. சிலர் ரெயில் சக்கரத்தில் சிக்கி நசுங்கினர். இதனால் அந்த இடமே ரத்த சகதியாக மாறியது.

நெஞ்சை பதை பதைக்க வைக்கும் இந்த விபத்தில் 12 பயணிகள் பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1.5 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.பி. மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், காயமடைந்தவர்கள் ஜல்கான் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயில்வே அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

Tags:    

Similar News