செய்திகள்

கோவை ஜெயிலில் மாவோயிஸ்டுகள் 2 பேர் ‘திடீர்’ உண்ணாவிரதம்

Published On 2017-06-19 16:12 IST   |   Update On 2017-06-19 16:12:00 IST
கோவை சிறையில் பார்க்க வந்தவர்களை பொய் வழக்கில் கைது செய்திருப்பதாக கூறி மாவோயிஸ்டுகள் 2 பேர் ‘திடீர்’ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:

கோவை கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் மாவோயிஸ்டுகள் தலைவன் ரூபேஷ், இவரது மனைவி ஷைனா மற்றும் கண்ணன், அனூப், வீரமணி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது தமிழகம் மற்றும் கேரள போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் இவர்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தி வருகின்றனர்.

தற்போது ரூபேஷ் கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 4 பேரும் கோவை மத்திய ஜெயிலில் உள்ளனர்.

கடந்த 13-ந் தேதி கோவை மத்திய ஜெயிலில் இருக்கும் ஷைனா, அனூப் ஆகியோரை பார்ப்பதற்காக மலப்புரத்தை சேர்ந்த ரஷீது, திருவனந்தபுரத்தை சேர்ந்த ஹரிஹர‌ஷர்மா ஆகியோர் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் ‘பென் டிரைவ்’ இருப்பதை சிறை காவலர்கள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து ரஷீது, ஹரி ஹர‌ஷர்மா ஆகியோரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருளை கொண்டு செல்ல முயன்றதாக இருவர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ரஷீது, ஹரிஹர‌ஷர்மா ஆகியோர் மீது பொய் வழக்குப் பதிவு போட்டு கைது செய்திருப்பதாக கூறி மாவோயிஸ்டுகள் அனூப், வீரமணி ஆகிய இருவரும் இன்று கோவை ஜெயிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருவரும் இன்று காலை சாப்பாட்டை வாங்கவில்லை. இருவரும் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்டு ரீனா ஜாஸ்மேரி மீது மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பாக அவரை இன்று மஞ்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டியிருந்தது.

இதைத்தொடர்ந்து ரீனாஜாஸ் மேரியை வேலூரில் இருந்து நேற்று மாலை கோவை ஜெயிலுக்கு அழைத்து வந்தனர். இன்று காலை கோவை ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மஞ்சேரி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

Similar News