தமிழ்நாடு

பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவை கொண்டாடுவோம் - திருமாவளவன்

Published On 2025-01-13 18:03 IST   |   Update On 2025-01-13 18:03:00 IST
  • உலகத் தமிழர் யாவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
  • தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.

பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழினத்தின் பாரம்பரிய பண்பாட்டுப் பெருவிழாவாம் பொங்கல் திருவிழாவையொட்டி உலகமெங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் திருநாளாய்ப் போற்றப்படும் இப்பெருநாள் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கும் நனிசிறந்த நன்னாளாகும். சாதி, மத அடையாளங்களைக் கடந்து அனைத்துத் தரப்பாரும் தமிழர்களாய் உணர்ந்து, ஒருங்கிணைந்து பொங்கலைக் கொண்டாடுவதற்கான சகோதரத்துவம் மலர வழிகாட்டும் உன்னத நாளாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இனிய பொங்கல் விழா வெறும் கொண்டாட்டத்திற்கான பண்டிகையாக மட்டும் இல்லாமல்; தமிழ்ச்சமூகத்தின் உயரிய மாண்புகளை மென்மேலும் செழுமைப் படுத்துவதற்கான "பண்பாட்டுக் கூடலாகவும்" விளங்குகிற ஒன்றாகும்.

தமிழினத்தின் மாண்புகளில் உயரியது " யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் சிந்தனை முதிர்ச்சியாகும். அத்தகைய பக்குவம் , முதிர்ச்சி மென்மேலும் பல்கிப் பெருக வேண்டும். சாதி, மதம், மொழி, இனம் , பால் போன்ற அடையாளங்களின் பெயரால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்வது, வெறுப்பு அரசியலை விதைப்பது, ஆதாயநோக்கில் அதனைப் பரப்புவது போன்றவற்றைத் தவிர்ப்பது தமிழினத்தின் மாண்புகளுக்குப் பெருமை சேர்க்கும்.

அத்தகைய பரந்த பார்வையோடு தமிழினத்தின் தலைநிமிர்வுக்காக தன் வாழ்நாளை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட மாமனிதர் தந்தை பெரியாரின் பெருவழியில், சமத்துவ இலக்கை எட்டுவதற்கு இந்நன்னாளில் உறுதியேற்போம்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்னும் நமது பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களையும் அவற்றின் நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புகளையும் பாதுகாக்கும் மகத்தான பேரரண் பெரியார் என்பதை மீள் உறுதி செய்வோம்.

தன்மானத்தையும் தலைநிமிர்வையும் தமிழர்களுக்கு மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல்விழாவைக் கொண்டாடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News