செய்திகள்

கோர்ட்டு தடையை மீறி அரசு ஊழியர்-ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்: 75 ஆயிரம் பேருக்கு சஸ்பெண்டு நோட்டீசு

Published On 2017-09-14 11:59 IST   |   Update On 2017-09-14 11:59:00 IST
கோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 75 ஆயிரம் பேருக்கு விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள்.
சென்னை:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவில் ஒரு பிரிவினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உரிமையாக கருத முடியாது என்று எச்சரித்ததோடு நாளை (15-ந்தேதி) கோர்ட்டில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும், அரசு அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நேற்று காத்திருப்பு போராட்டம் என்ற பெயரில் அரசு அலுவலகங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் போராட்ட களத்திலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

சென்னையில் எழிலக வளாகத்தில் அரசு ஆண்- பெண் ஊழியர்கள் சமையல் செய்து உணவுகளை சாப்பிட்டார்கள்.

அரசு ஊழியர்கள் இரவிலும் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள். சென்னையில் 10 பெண்கள் உள்பட 60 பேர் விடிய விடிய போராட்ட களத்தில் படுத்து தூங்கி இன்று காலையிலும் தொடர்ந்தார்கள்.

இதே போல மதுரை, கோவை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் போராட்டத்தை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விளக்கத்தையும் தமிழக அரசு கோர்ட்டில் அளிக்க வேண்டும் என்று உத்தர விட்டார்.

ஏற்கனவே அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், விடுப்பில் செல்லக்கூடாது என்றும் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தமிழக அரசு அழைப்பு விடுத்தது.

அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 17ஏ நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

தற்போது தற்காலிக வேலை நீக்கம் செய்யக்கூடிய 17-பி நோட்டீசு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 75 ஆயிரம் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் விளக்க நோட்டீசை தபால் மூலமாகவும், நேரிலும் வழங்கி வருகிறார்கள்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக்க நோட்டீசை தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்குகிறார்கள்.

அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறையைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் வினியோகித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடத்தில் பந்தல் அமைத்து நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

அங்கேயே சமைத்து சாப்பிட்டு விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

2-வது நாளாக இன்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

கோவையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே சமைத்து சாப்பிட்ட அவர்கள் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரவு 8 மணி அளவில் வெளியில் இருந்து தக்காளி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம் பொட்டலங்கள் வாங்கி வந்து பரிமாறப்பட்டன.

அப்போது திடீரென கனமழை பெய்தது. இரவு 9 மணி வரை கனமழை பெய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டி டத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். சிலர் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே தரையில் படுத்து உறங்கினர்.

விடிய, விடிய இவர்களது போராட்டம் நீடித்தது. இதில் பெண் ஊழியர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது. காலையில் உப்புமா தயார் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஈரோட்டில் தாலுகா அலுவலகம் முன் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்

ஈரோடு தாலுகா அலுவலகம் முன் கடந்த 2 நாட்களாக அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கைதாகி மாலை 6 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

பெண் ஊழியர்கள் தாலுகா அலுவலகம் முன் சமையல் செய்து சக ஊழியர்களுக்கு வழங்கினர்.

இன்று (வியாழக்கிழமை) முதல் ஈரோடு தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து விடிய-விடிய காத்திருப்பு போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்குகிறார்கள். இதற்காக இன்று காலை 9 மணி முதல் ஈரோடு தாலுகா அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் திரண்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

நெல்லை- தூத்துக்குடி யில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பகலில் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். இரவிலும் அங்கேயே தங்கியிருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் மாலையில் கைது செய்தனர்.

நெல்லை கலெக்டர் அலு வலகத்தில் 173 பெண்கள் உள்பட 376 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய 135 பெண்கள் உள்பட 385 பேரை போலீசார் கைது செய்து மடத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று காலை மீண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த நெல்லை- தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News