செய்திகள்

தமிழக அரசு பெட்ரோல்-டீசல் மதிப்பு கூட்டு வரியை குறைக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Published On 2017-10-08 14:50 IST   |   Update On 2017-10-08 14:50:00 IST
தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன் அவற்றின் மீதான கலால் வரியை 2 சதவீதம் குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் மதிப்புக்கூட்டு வரியை 5 சதவீதம் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இதையேற்று குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ள நிலையில், தமிழக அரசு அமைதி காப்பது கண்டிக்கத்தக்கது.

உலகிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் உற்பத்தி விலை ரூ.25.00 ஆக உள்ள நிலையில், அவற்றின் விற்பனை விலை மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ளது. பெட்ரோல் மீது ரூ.45 வரையிலும், டீசல் மீது ரூ.35 வரையிலும் வரிகள் விதிக்கப்படுகின்றன.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததைப் பயன்படுத்தி மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியதைப் போலவே தமிழக அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 27 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாகவும், டீசல் மீதான வரியை 21.40 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாகவும் உயர்த்தியது. கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அதிகரித்த வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு 15.77 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 15.47 ரூபாயும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரிக்குறைப்பை செய்ய அரசுகள் மறுக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் உயர்த்தப்பட்ட வரியை குறைப்பதால் அவற்றுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படப்போவதில்லை. எரிபொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி, கலால் வரியில் மாநில அரசின் பங்கு ஆகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.26.48, டீசல் விற்பனை மூலம் ரூ.18.26 வருவாய் கிடைக்கிறது. பெட்ரோலின் உற்பத்திச் செலவை விட அதிகமாக மதிப்புக்கூட்டு வரியை மாநில அரசு வசூலிப்பது எவ்வகையிலும் முறையானதோ, நியாயமானதோ அல்ல.

எனவே, பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் உயர்த்திய கலால் வரியையும், தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்திய மதிப்புக் கூட்டு வரியையும் உடனடியாக குறைக்க வேண்டும். இதன் மூலம் எரிபொருட்களின் விலை 22 சதவீதம் வரை குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Similar News