செய்திகள்

மலைப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது

Published On 2017-10-30 15:55 IST   |   Update On 2017-10-30 15:55:00 IST
மலைப்பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற விவசாயி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து காயமடைந்தர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை:

ஜவ்வாதுமலை மேல்சோளங்குப்பம் கிராமத்தை சேர்ந்த பழனி மகன் சஞ்சீவ்காந்தி (வயது 35) விவசாயி. மற்றும் அவரது நண்பர் ராஜா (30) ஆகியோர் நேற்று மலைப்பகுதியில் மாடு மேய்க்க சென்றனர்.

மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது சஞ்சீவ்காந்தி மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதனால் அலறிய படி அவர் சுருண்டு விழுந்தார்.

10 குண்டுகள் வரை அவர் மீது பாய்ந்துள்ளது. இது குறித்து ராஜா அளித்த தகவலின்பேரில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சஞ்சீவ் காந்தியை மீட்டு திருவண்ணாமலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குண்டு பாய்ந்ததில் அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சஞ்சீவ்காந்தியை துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம் இருந்ததா? அல்லது வேட்டையாட வந்த கும்பல் சுட்டதில் குண்டுகள் பாய்ந்ததா? என்பது குறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News