செய்திகள்

மு.க.முத்துவை ஆஜர்படுத்த கோரி மகள் வழக்கு- போலீசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-03-01 13:46 IST   |   Update On 2018-03-01 13:46:00 IST
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை ஆஜர்படுத்தக்கோரி அவருடைய மகள் தொடர்ந்த வழக்கில் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்ஸ் அனுப்பியுள்ளது.
சென்னை:

ஐகோர்ட்டில் ஷீலா ராணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

‘என்னுடைய தந்தை மு.க.முத்து. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன். என் தந்தைக்கு தாயார் இரண்டாவது மனைவி.  என் தந்தை எங்களை நல்லபடியாக கவனித்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் எங்களை பார்க்க வரவில்லை. முதல் மனைவியின் வீட்டில் தற்போது உள்ளார்.

அவர் உடல் நலம் குறித்து விசாரிக்கவும், அவரை பார்க்கவும், நானும் என் அம்மாவும் அங்கு சென்றோம். ஆனால், என் தந்தையின் முதல் மனைவியின் மகன் அறிவுநிதி, எங்களை வீட்டிற்கு அனுமதிக்க மறுக்கிறார். என் தந்தையை சந்திக்கவும் விடவில்லை.
என் தந்தை சட்டவிரோத காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.


எனவே, என் தந்தையை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என் தந்தையை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்டோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.  அறிவுநிதியை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்த்துள்ளார். இருந்தாலும், அறிவுநிதிக்கு தற்போது நோட்டீசு அனுப்ப உத்தரவிட முடியாது. போலீசார் பதில் மனு தாக்கல் செய்த பின்னர், அவருக்கு நோட்டீசு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர். #Tamilnews

Similar News