செய்திகள்
மாணவன் அலெக்ஸ் பாண்டியன்

திட்டக்குடி அரசு பள்ளி மாணவனுக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது

Published On 2018-07-06 09:46 GMT   |   Update On 2018-07-06 10:02 GMT
திட்டக்குடி அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு இன்று எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. . அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.
சென்னை:

அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். தகுதி மதிப்பெண் பெற்றால் அரசு ஒதுக்கீட்டில் சேர முடியாது.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள் தான் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர்.

மருத்துவ கலந்தாய்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவடைகிறது. சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவ கல்லூரிகள், கோவை, மதுரை, சேலம் போன்ற மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பி விட்டன.

இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவருக்கு இன்று எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி மா.புடையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் பெயர் அலெக்ஸ்பாண்டியன். அவர் பிளஸ்-2 தேர்வில் 1111 மதிப்பெண் பெற்றார்.

டாக்டராக வேண்டும் என்று லட்சியத்துடன் படித்த அலெக்ஸ் பாண்டியனை அரசு நடத்தும் நீட் பயிற்சிக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு மாதம் பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். நீட் தேர்வில் 720-க்கு 306 மதிப்பெண் எடுத்திருந்தார்.

எம்.பி.பி.எஸ். கனவு நிறைவேறுமா? என்ற ஏக்கத்துடன் விண்ணப்பித்தார். இன்று 5-வது நாளாக நடந்த கலந்தாய்வில் அலெக்ஸ் பாண்டியனுக்கு எம்.பி.பி.எஸ். சேருவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர் ஆனந்த கண்ணீர் விட்டார். அவரது பெற்றோர்களும் கலங்கினார்கள்.

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவருக்கு முதன் முதலாக எம்.பி.பி.எஸ். சீட் இப்போது கிடைத்துள்ளது. இதனை மிகப்பெரிய சாதனையாக மாணவரின் பெற்றோர் கருதினார்கள்.

இதுபற்றி மாணவர் அலெக்ஸ்பாண்டியன் கூறியதாவது:-

நான் மங்களூர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். எனது ஆசிரியர்கள் முயற்சியால் அரசின் நீட் பயிற்சியினை மேற்கொண்டேன். எனது வெற்றிக்கு பள்ளியின் ஆதரவும், பெற்றோரின் ஒத்துழைப்பும் தான் காரணம். கிராமங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு நான் ஒரு எடுத்து காட்டு.

நான் டாக்டராகி கிராமப் புறங்களில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர் அலெக்ஸ் பாண்டியனின் தந்தை தங்க ராஜன் சத்துணவு அமைப்பாளர், தாயார் மாரிமுத்தாள். #NEET
Tags:    

Similar News