தாராபுரத்தில் குடோனில் 134 மூட்டை விதை நெல் திருடிய மானேஜர் கைது
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொளத்து பாளையம் மேட்டுவலசு பகுதியை சேந்தவர் சிவக்குமார் (வயது 43). பல இடங்களில் விதை நெல் குடோன் நடத்தி வருகிறார்.
பால்சொசைட்டி அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமாக இடத்தில் ஒரு குடோன் உள்ளது. இதன் மானேஜராக காளிப்பாளையம் காந்திஜி நகரை சேர்ந்த விஜயராஜ் (43) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளார்.
நேற்று காலை நெல்குடோனில் இருந்து அவசர அவசரமாக ஆட்கள் மூலம் மானேஜர் விஜயராஜ் வேனில் நெல் மூட்டைகளை ஏற்றினார். இதில் சந்தேகம் அடைந்த இட உரிமையாளரின் மனைவி குடோன் உரிமையாளர் சிவக்குமாருக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.
தகவல் அறிந்து குடோன் உரிமையாளர் மானேஜரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவர் தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மானேஜரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் உரிமையாளருக்கு தெரியாமல் 134 நெல் மூட்டைகளை திருடி சோளக்கடை வீதியில் உள்ள விஸ்வநாதன் என்பவருக்கு விற்றதாக கூறினார்.
நெல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து நெல் மூட்டைகளை திருடிய விஜயராஜை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விதை நெல்லின் மதிப்பு ரூ.2 லட்சம் என்று குடோன் உரிமையாளர் தெரிவித்தார்.