வங்கதேசத்தில் இந்து மத துறவி சின்மய் கிருஷ்ண தாசுக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு
- தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
- அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
டாக்கா:
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவி ஏற்ற பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடக்கின்றன. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, கடந்த நவம்பர் 25-ம் தேதி இந்து அமைப்பின் தலைவரும், இஸ்கான் முன்னாள் துறவியுமான சின்மய் கிருஷ்ணதாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். மறுநாள் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. இதனால் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோர்ட்டுக்கு வெளியே நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், சின்மய் கிருஷ்ணதாசின் ஜாமின் மனு மீதான விசாரணை சட்டோகிராம் பெருநகர அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசத்துரோக வழக்கு என்பதால் ஜாமின் வழங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதி சைபுல் இஸ்லாம், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சின்மய் கிருஷ்ண தாசின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனால் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளோம் என சின்மய் கிருஷ்ணதாசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.