செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- செந்தில் பாலாஜி

சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி வாக்குவாதம்

Published On 2019-07-04 14:29 IST   |   Update On 2019-07-04 15:29:00 IST
தமிழக சட்டசபையில் இன்று மின்துறை, மதுவிலக்கு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செந்தில்பாலாஜி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
சென்னை:

சட்டசபையில் இன்று மின்துறை, மதுவிலக்கு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் செந்தில்பாலாஜி (தி.மு.க.) பேசினார். அப்போது மு.க.ஸ்டாலினை புகழ்ந்தும் கடைசியாக பேசியபோது நான் குனிந்து, தவழ்ந்து பதவியை பெறவில்லை என்றார்.

இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்து பல விளக்கங்களை கூறினார்.

செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது எப்படியெல்லாம் பேசினார். எப்படியெல்லாம் குனிந்தார் என்பது தெரியாதா? என்றார்.

அப்போது மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு எங்கள் கட்சி உறுப்பினர் புகழ்ந்துதான் பேசினார். இதில் நீங்கள் இடைமறிக்கலாமா? என்றார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

செந்தில்பாலாஜியை பற்றி இதே எதிர்கட்சி தலைவர் தி.மு.க. ஸ்டாலின் 2.4.2013 அன்று சட்டசபையில் என்ன பேசினார்? வெளியில் சென்று என்ன பேசினார்? என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒரே வருடத்தில் 3 சின்னங்களில் போட்டியிட்டவர்தான் செந்தில்பாலாஜி/ முதலில் ம.தி.மு.க., பிறகு அ.தி.மு.க., பின்னர் அ.ம.மு.க. தற்போது தி.மு.க. என பல கட்சிகளுக்கு மாறி மாறி சென்று கொண்டிருப்பவர்தான் செந்தில்பாலாஜி.


அப்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், நாங்கள் அன்புக்காகத்தான் குனிந்து வணங்குகிறோம். செந்தில் பாலாஜி குனிந்து பதவி பெற்ற புகைப்படங்களும் ஏராளம் உள்ளன. அதை கொடுத்தால் அவை நிறைந்து விடும் என்றார்.

அப்போது முதல்வர் கூறுகையில், ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர் என்று விமர்சித்தவரைத்தான் இப்போது நீங்கள் (தி.மு.க.வின்) வேட்பாளராக நிறுத்தி அவைக்கு அனுப்பி உள்ளீர்கள் என்றார்.

நாங்கள் அன்புக்குத்தான் அடிமை. கட்சி மாறி வந்தவர்கள் இல்லை. குனிந்து போனார்கள் என்ற வார்த்தைக்கு எதிர்வாதம் செய்ய தயாராக இல்லை. இது வருத்தமாக உள்ளது

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜனநாயகத்தில் சிலர் கட்சி மாறுவது பழக்கம். அந்த வகையில், சில வார்த்தைகளை செந்தில் பாலாஜி பேசுகிறார் என்றார்.

இதற்கு மீண்டும் செந்தில் பாலாஜி எழுந்து கூறியதாவது:-

நான் 5 கட்சி மாறியவர் என்று முதல்வர் சொல்கிறார். இதை நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகுவேன். அந்த சவாலை சந்திக்க தயாரா என்றார்.

எடப்பாடி பழனிசாமி:- ஒரு ஆண்டில் 3 முறை இரட்டை இலைக்கு இவருக்காக பிரசாரம் செய்தோம். ஆனால் மாற்று கட்சிக்கு சென்றதும் மனசாட்சியை மறந்துபேசி வருகிறார். நீங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு சென்றீர்கள்?

அமைச்சர் தங்கமணி: யார் வேண்டுமானாலும் கட்சி மாறலாம். வேறு கட்சிக்கு செல்லும்போது பெயர் மாற்றியது இவர்தான்.

செந்தில்பாலாஜி: என் மீது புழுதி வாரி வீசுகின்றனர். இதனால் நான் பதில் சொல்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி (குறுக்கிட்டு): இவருக்காக தேர்தலில் இரவு பகலாக உழைத்தோம். அது அவருக்கும் தெரியும். இடைத்தேர்தலில் உழைத்ததால்தான் வெற்றி பெற்றது.

செந்தில்பாலாஜி இருக்கும் இடத்துக்கு தக்கவாறு பேசுகிறார். எங்களைப் பற்றி பேசினால் நாங்கள் அவரை பற்றி பேசுவோம்.

செந்தில்பாலாஜி: என் தாய்-தந்தை வைத்த பெயரை மாற்றி கொள்வது எனது தனிப்பட்ட உரிமை. (இவ்வாறு கூறிவிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் மாற்றியதை சூசகமாக குறிப்பிட்டார்)

1984 முதல் அதே கட்சியில் இருந்துகொண்டுதான் பாஸ்கர் என்ற பெயரை விஜயபாஸ்கர் என்று மாற்றினேன். வேறு கட்சிக்கு போய் பெயர் மாற்றவில்லை.

உறுப்பினர் (செந்தில் பாலாஜி) அவரது கட்சி பற்றி பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசும்போதுதான் பிரச்சனை வருகிறது. குனிந்து குனிந்து என்ற வார்த்தைகளை சொல்லும்போது அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டி உள்ளது.

மு.க.ஸ்டாலின்:- செந்தில்பாலாஜி யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.

எடப்பாடி பழனிசாமி:- எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சி உள்ளது. மரபுகளை மீறி தேவையில்லாமல் பேசும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள்.

இந்த விவாதம் மானிய கோரிக்கையில் இருந்து விலகி வேறு எங்கோ செல்கிறது. இவ்வளவு நேரம் பேசியது போதும். மானிய கோரிக்கையில் பேசுங்கள் என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனால் சுமார் 30 நிமிடம் சபையில் கடும் விவாதம் காணப்பட்டது.

Similar News