செய்திகள்
அம்மா உணவகம்

கொடைக்கானல் அம்மா உணவகத்தில் கள்ளத்தனமாக உணவு விற்பனை

Published On 2019-09-12 22:59 IST   |   Update On 2019-09-12 22:59:00 IST
கொடைக்கானல் அம்மா உணவகத்தில் கள்ளத்தனமாக உணவு விற்பனை செய்யப்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்:

தமிழகம் முழுவதும் ஏழை எளிய அன்றாடம் பணிக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் குறைவான விலையில் சுவையான உணவு உண்பதற்கு ஏற்றவாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் அம்மா உணவகம். பல்வேறு பகுதிகளில் இந்த உணவகம் இயங்கிவருகிறது.

கொடைக்கானல் கே.ஆர்.ஆர்.கலையரங்கம் பகுதியில் அம்மா உணவகம் உள்ளது. இதன் மூலம் ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் கொடைக்கானல் சுற்றுலா வரும் நடுத்தரவர்க்க பயணிகள் பயன்பெறுகிறார்கள். கூட்டுறவு பண்டகசாலையிலிருந்து இங்கு உணவு சமைப்பதற்கான பொருட்கள் அனுப்பப்படுகிறது.இந்த பொருட்கள் அவ்வப்போது மறைமுகமாக குறைவான விலையில் விற்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமும் இங்கு வந்து சாப்பிடுபவர்களுக்கே மலிவு விலையில் உணவு வழங்கப் படவேண்டும் என்பதே அரசின் உத்தரவாகும்.

ஆனால் இங்கு பணியாற்றுபவர்கள் அன்றாடம் தயாராகும் இட்லி,பொங்கல், மதிய உணவுகளான சாம்பார் சாதம் ,தயிர் சாதம் போன்றவைகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு பார்சலாக வழங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர்.

தினசரி உணவு வழங்கும் நேரம் முடிவதற்குள் உணவு தீர்ந்துவிட்டதாக அம்மா உணவக ஊழியர்கள் கூறிவந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அடிக்கடி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் ஒரு நபருக்கு ஹாட்பாக்சில் மொத்தமாக இட்லி சாம்பார் வழங்கியதை கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்தனர்.

இதை தொடர்ந்து அம்மா உணவக ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் வாக்கு வாதம் நடந்த நிலையில் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் எங்கே வேண்டுமானாலும் புகார் செய்துகொள்ளுங்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என பேசியதாகவும் கூறப்படுகிறது. நீண்ட நேரம் வாக்குவாதம் நடந்த நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் மலிவுவிலை உணவில் கைவைத்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News