செய்திகள்
பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை மு.க.ஸ்டாலின் வழங்கிய போது எடுத்த படம்.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Published On 2019-10-22 13:03 IST   |   Update On 2019-10-22 13:03:00 IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
சென்னை:

பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரையில் 3,500 பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்.’ கொசுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு அறிகுறியுடன் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உயிர் இழப்பை தடுக்க அனைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள், நர்சுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளுக்கு மட்டுமின்றி உடன் வரும் உறவினர்களுக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் கூடும் பஸ், ரெயில் நிலையங்களில் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய முயற்சி எடுக்க வேண்டும். நிலவேம்பு கசாயத்தால் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம். தி.மு.க. சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு வழங்கிய அவர் நிலவேம்பு கசாயத்தை குடித்தார். பெண்கள் ஆர்வமுடன் வாங்கி குடித்தனர்.

Similar News