செய்திகள்
குத்தாலத்தில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்
குத்தாலத்தில் சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த ஒரு சரக்கு வேனை போலீசார் நிறுத்த முயற்சித்தனர்.
ஆனால் அந்த வேன் நிற்காமல் வேகமாக சென்று விட்டது. உடனே குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் தங்களது வாகனங்களில், அந்த சரக்கு வேனை துரத்தி சென்றனர்.
போலீசார் துரத்தி வருவதை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த 2 பேர், திருவாலங்காடு கடைவீதி சாலையில் அந்த வேனை நிறுத்தி விட்டு வேனில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து அந்த வேனில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது வேனுக்குள் 100 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்களும், ஒரு கேனில் சாராயமும் இருந்தது தெரிய வந்தது. இவைகளை அந்த இருவரும் கடத்தி சென்றது தெரிய வந்தது.
பின்னர் போலீசார், 4 ஆயிரத்து 800 மது பாட்டில்கள், 250 லிட்டர் சாராயம் மற்றும்சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மது பாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.