செய்திகள்
மரணம்

குமுளி அருகே பஸ் தீ பிடித்து எரிந்து வாலிபர் பலி

Published On 2020-03-02 16:35 IST   |   Update On 2020-03-02 16:35:00 IST
குமுளி அருகே பஸ் தீப்பிடித்து எரிந்ததில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்:

குமுளி அருகே உள்ள செழிமடை என்ற பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் பஸ் நிறுத்தப்பட்டு இருந்தது. பஸ் அதிகாலையில்தான் பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதால் அதில் ராஜன் (வயது 24) என்ற கிளீனர் மட்டும் படுத்திருந்தார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பஸ் தீ பிடித்து எரிந்தது. நன்றாக தூங்கிக் கொண்டு இருந்த ராஜன் சிறிது நேரம் கழித்து திடுக்கிட்டு எழுந்தார். ஆனால் பஸ்சின் அனைத்து பகுதிகளுக்கும் தீ பரவியதால் அவரால் வெளியே வர முடியவில்லை.

உடனே அருகில் இருந்த நபர்களை சத்தம் போட்டு அழைத்தார். அங்கிருந்த சிலர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் ராஜன் பஸ்சுக்குள்ளேயே தீயில் கருகி உயிரிழந்தார்.

கட்டப்பணையில் இருந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. இது குறித்து குமுளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News