செய்திகள்
கோப்புப்படம்

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 68,000 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2020-03-02 17:06 IST   |   Update On 2020-03-02 17:06:00 IST
ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 68,000 மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.

வேலூர்:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது வருகிற 24-ந் தேதி வரை பிளஸ் - 2 தேர்வு நடக்கிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 369 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 40 ஆயிரத்து 531 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக 170 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இன்று தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர தேர்வு மையங்களை கண்காணிக்கவும் காப்பி அடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழு பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில் 10 பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் 41 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 245 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 27 ஆயிரத்து 860 பேர் பொதுத் தேர்வு எழுதினர்.

இதற்காக மாவட்டத்தில் 109 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. தனித்தேர்வு எழுதுபவர்களுக்கு 2 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேர்வு நடந்தது.

1785 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 218 பேர் கொண்ட பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

தேர்வு மையங்களில் கலெக்டர், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

எழுதுபொருட்கள் தவிர மற்ற எதுவும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பிளஸ் - 1 பொதுத்தேர்வுகள் நாளை மறுதினம் தொடங்கி 27-ந் தேதி முடிவடைகிறது.

இதனால் மேல்நிலைப்பள்ளிகள் பரபரப்பாக காணப்படுகின்றன.

Similar News