கோயம்பேட்டில் புதுமண தம்பதிக்கு கொரோனா பாதிப்பு
போரூர்:
கோயம்பேடை சேர்ந்த 27வயது வாலிபர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்தார் .
இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
நேற்று அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது மனைவிக்கும் சுகாதார துறையினர் பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கும் கொரனோ தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணவன்-மனைவி இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாலிபருடன் வசித்து வரும் அவரது தாய் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அவர் கோயம்பேடு பூ மார்கெட் முன்பு பிளாட்பாரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்? என்கிற விபரங்களை சுகாதார துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியந்தோப்பில் வசித்த மனைவியின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்துபோனார்.
இதில் மனைவியுடன் வாலிபர் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது மாமியார் மற்றும் உறவினர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த வாலிபர் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் 20ந் தேதி வரை கார் ஒட்டியுள்ளதும், கடந்த 2- ந் தேதி மாமனார் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்ததில் இருந்து உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.