செய்திகள்
அமைச்சர் கே.பி.அன்பழகன் பயனாளிக்கு கடன் உதவி வழங்கினார்

விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கீடு- அமைச்சர் தகவல்

Published On 2020-06-08 16:06 IST   |   Update On 2020-06-08 16:06:00 IST
தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.3¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
தர்மபுரி:

பாப்பிரெட்டிப்பட்டி, அரூரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளின் சார்பில் சிறப்பு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ் வரவேற்றார்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள் சார்பில் 50 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்புள்ள கடன் உதவிகளையும், 44 பயனாளிகளுக்கு ரூ.35.45 லட்சம் மதிப்புள்ள டாம்கோ கடன் உதவிகளையும் வழங்கினார். இதேபோன்று 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.93 லட்சம் மதிப்புள்ள கடன் உதவிகளையும், ஒரு பணிபுரியும் மகளிருக்கு ரூ.7 லட்சம் கடன் உதவியையும், 64 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பில் சிறு வணிக கடன் உதவி என மொத்தம் 166 பயனாளிகளுக்கு ரூ.85 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 2019-2020-ம் நிதி ஆண்டில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதே போன்று நடப்பு நிதியாண்டில் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.3 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் பாப்பிரெட்டிப்பட்டி கிளையின் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

விழாவில் மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பொன்னுவேல், சிவப்பிரகாசம், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, மாவட்ட அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் மதிவாணன், செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News