செய்திகள்
வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டையும், அது வெடித்த இடத்தில் கருகிய நிலையில் கிடந்த சிதறல்களையும் படத்தில் காணலாம்.

தேவகோட்டை அருகே வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய நண்பர்கள்

Published On 2020-07-23 16:48 IST   |   Update On 2020-07-23 16:48:00 IST
வீட்டு வாசலில் நின்றிருந்த வாலிபர் மீது அவருடைய நண்பர்கள் 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சாவூரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி(வயது 26). இவருடைய நண்பர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய்(23), பனங்காட்டான் வயல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துராமன்(28), அமராவதிபுதூரை சேர்ந்த சங்கரன் மகன் மதிபாலா(22).

இந்தநிலையில் ராஜபாண்டிக்கும் மற்ற நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஆகி முன்விரோதம் இருந்தது. ராஜபாண்டி மலேசியாவிற்கு சென்றுவிட்டு சமீபத்தில் தாணிச்சாவூரணி கிராமத்திற்கு திரும்பி வந்து வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ராஜபாண்டி தனது வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதை கவனித்த ராஜபாண்டி சுதாரித்து, அங்கிருந்து ஓடி உயிர் தப்பினார். நாட்டு வெடிகுண்டு பலத்த சத்தத்துடன் வெடித்ததில் ராஜபாண்டியின் தாயார் அதிர்ச்சியில் விழுந்து காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தி நாட்டு வெடிகுண்டு வீசியதாக விஜய், முத்துராமன், மதிபாலா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதில் தொடர்புடைய வாலிபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், தர்மபுரி என்ற பெயரில் அச்சடிக்கப்பட்ட பையில் வைத்து வெடிகுண்டை கொண்டு வந்து வீசியது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News