செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
லாரிகள் வேலைநிறுத்தத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
டீசல் விலை உயர்வு, சாலை வரியை ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை (ஒரு வருடத்துக்கு) ரத்து செய்ய வேண்டும். லாரி ஓடாத நாட்களுக்கு சாலை வரி வசூலிப்பு, பழைய வாகனங்களின் உரிமையை ரத்து செய்வதை கண்டித்தும், போலீசார் பொய்யான வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில், நேற்று ஒருநாள் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று லாரிகள் ஓடவில்லை. திருச்சி மாவட்டத்தில் இந்த வேலைநிறுத்தத்தில் 15 ஆயிரம் லாரிகள் பங்கேற்றன. இதில் மேலும், பல்வேறு சங்கங்களும் கலந்து கொண்டன.
திருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஒருநாள் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதேநிலை நீடித்தால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேலும் திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் ஜோசப் தலைமையில், திருச்சி குட்ஷெட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். லாரிகள் ஓடாததால் திருச்சி குட்ஷெட்டில் சரக்கு ரெயில்களில் இருந்த சரக்குகள் கையாளப்படவில்லை.