செய்திகள்
கொலை செய்யப்பட்ட பிரகதி மோனிகா.

திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை

Published On 2020-08-09 16:16 IST   |   Update On 2020-08-09 16:16:00 IST
விருதுநகர் அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்- ஆலமரத்துப்பட்டி ரோட்டில் உள்ள பெரியார்காலனியை சேர்ந்தவர் செல்வப்பாண்டியன் (வயது 26). இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதி மோனிகா (24) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்தது. செல்வப்பாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டைபெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பட்டதாரி பெண்ணான பிரகதி மோனிகா வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை செல்வப்பாண்டியன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் ஒரு முறை புதுப்பெண் பிரகதி மோனிகா தனது கணவருடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது சிறிது நேரத்தில் சாப்பிட வருவதாக தகவல் கூறி உள்ளார். இந்த நிலையில் பிரகதி மோனிகா வீட்டின் அருகில் வசித்து வரும் பெண் ஒருவர், செல்வப்பாண்டியன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் பிரகதி மோனிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதுகுறித்து செல்வப்பாண்டியனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கொடுத்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுப்பெண் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பிரகதிமோனிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். மர்ம நபர்களிடம் அவர் போராடியுள்ளார். அவரது கையிலும் வெட்டுக்காயம் உள்ளது. புதுப்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்றும், அவரது வீட்டில் இருந்த நகைகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

Similar News