செய்திகள்
மயான கொட்டகையில் முள் மரங்கள் வளர்ந்து, புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது.

வெள்ளுவாடியில் மயான பாதை- கொட்டகையை சீரமைக்க கோரிக்கை

Published On 2020-08-13 12:26 IST   |   Update On 2020-08-13 12:26:00 IST
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடியில் மயான பாதை மற்றும் கொட்டகையை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெள்ளுவாடி கிராம மக்களுக்கு பொதுவான மயானம் உள்ளது. இந்த மயானத்தில், இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கான கொட்டகையும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மயானத்திற்கு சென்று வருவதற்கு போதுமான பாதை வசதி இல்லை. இதனால் அருகில் உள்ள வெள்ளாற்றின் வழியாக மயானத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் வெள்ளுவாடி கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்கும் வழக்கம் உள்ளவர்கள், மயான பகுதிக்கு ஆற்றின் வழியாக உடலை கொண்டு சென்று புதைக்கின்றனர். ஆனால் இறந்தவர் உடலை எரியூட்டுகின்றவர்கள், மயானத்தில் உள்ள எரியூட்டு கொட்டகைக்கு இறந்தவர் உடலை கொண்டு செல்லாமல், அருகில் உள்ள வெள்ளாற்றில் வைத்து உடலை எரியூட்டுகின்றனர்.

இதனால் ஆற்றின் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. மேலும் மயான கொட்டகையிலும் முள் மரங்கள் வளர்ந்து, புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மயான பாதை மற்றும் கொட்டகையை சீரமைத்து, இறந்தவர்களின் உடலை மயான கொட்டகையில் எரியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News