செய்திகள்
ரூ.75 லட்சம் செலவில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா - எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
ஈரோட்டில் ரூ.75 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட மோளகவுண்டன்பாளையம் கரூர் ரோடு பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கோவையில் அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா மாதிரியில் ஈரோடு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் ஆலோசனையின் பேரில் இந்த பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
20 ஆயிரத்து 759 சதுர அடி பரப்பளவில், ரூ.75 லட்சம் செலவில் பூங்கா கட்டமைப்புகள் செய்யப்பட்டு உள்ளன. சாலைகளில் பொதுமக்கள் செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய அனைத்து வகையான போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் விதிமுறைகளை ஒரே இடத்தில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிகள் முடிந்து நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு அகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டனர். ஈரோடு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டும், தற்போதைய நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுமான எஸ்.சக்திகணேசன் சிறப்பு அழைப்பாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், பகுதி செயலாளர்கள் மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.