செய்திகள்
குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்கக்கோரி பல்லடம் அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லடம்:
பல்லடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பல்லடம் ஒன்றிய குழு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பில் சாக்கடைகள் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது
மேலும் அந்த பகுதிக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சாக்கடை வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், சாக்கடை வாய்க்கால் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், 20 நாட்களாக குடிநீர் வழங்காததையும் கண்டித்தும், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடம் வந்த பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வட்டாரவளர்ச்சி அலுவலர் பானுமதி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் சாக்கடை பணிகள் முடிக்கப்படும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து 2 மணிநேரம் நடந்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.