செய்திகள்
கொரோனா வைரஸ்

நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்- மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்

Published On 2020-10-26 03:00 GMT   |   Update On 2020-10-26 03:00 GMT
பண்டிகை காலங்களில் நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாகர்கோவில்:

கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது விழாக்காலம் தொடங்கியுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும். அதாவது, 65 வயதை கடந்த முதியவர்கள், கர்ப்பிணிகள், இதரநோய் தொற்று உடையவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்களை தவிர்த்து வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் பொது வெளியில் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொது வெளியில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். பொது வெளிகளில் மது மற்றும் போதைப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. மக்கள் பொது இடங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் மற்றும் பயணத்தின் போதும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

பொது இடங்களில் எச்சில் துப்புதல் தண்டனைக்குரிய குற்றமாகும். அரசின் விதிமுறைகளை மீறி முககவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தால் ரூ.500-ம், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம், விதிகளைமீறி செயல்படும் முடிதிருத்தகம், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

பணியிடங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை, கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் கதவுகள் போன்றவற்றை அவ்வப்போது கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News