செய்திகள்
மழை

மதுரையில் கொட்டித்தீர்த்த மழை- 1,300 கண்மாய்கள் நிரம்பின

Published On 2021-01-08 19:53 IST   |   Update On 2021-01-08 19:53:00 IST
மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1300-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
மதுரை:

மதுரை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்கள், குளங்கள் நிரம்பி உள்ளன.

1,300 கண்மாய் குளங்கள் நிரம்பி மதகுகள் வழியாக அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில கண்மாய்களில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள மங்களக்குடி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கண்மாய் நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த கண்மாயில் இருந்து வெளியேறும் மழைநீர் அங்குள்ள பாலாஜி நகரில் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். மேலும் மழை காரணமாக அப்பகுதி ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை கோசாக்குளம் அருணாச்சலம் நகர், கனகவேல் காலனி, கீழ பனங்காடி வசந்தநகர் பகுதியில் வரத்து கால்வாயில் அதிகளவில் மழைத்தண்ணீர் வருவதால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வீடுகளிலிருந்து வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.

இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட வி‌ஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து 3-வது நாளாக அருணாச்சல நகர் பகுதி மழை நீரால் சூழப்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மதுரை மாவட்டத்தில் நேற்று மொத்தம் 51 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இடையபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி, மதுரை விமான நிலையம், மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்றும் மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரை நகர் பகுதியில் நேற்று இரவு முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. இன்று காலையும் தொடர் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

காலையில் பெய்த மழை காரணமாக வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். மழை காரணமாக பெரியார் பஸ் நிலையம், தெற்கு வாசல், காளவாசல், பாலஸ் ரோடு, கீழவாசல் சந்திப்பு, விளக்குத்தூண், மாசி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே குண்டும், குழியுமாக இருந்த சாலை தற்போது மேலும் மோசமாக காணப்பட்டன. மதுரை நகர தெருக்களும் சேறும், சகதியுமாக இருந்தது.

தொடர் மழையால் மதுரை வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏ.வி.பாலத்தின் கீழ் உள்ள தரைப்பாலத்தை தண்ணீர் தொட்டு செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இன்னும் சில நாட்களுக்கு மதுரை மாவட்டத்தில் மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News