செய்திகள்
தங்க மோதிரம் பரிசு அறிவித்தும் பணியை புறக்கணிக்கும் ஓவர்லாக் டெய்லர்கள்
சமீபத்தில் ஒரு நிறுவனம் வாரம் முழுவதும் வேலை செய்தால் ஓவர்லாக் டெய்லருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என விளம்பரப்படுத்தியது.
திருப்பூர்:
கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்ததால் ஜூன் முதல் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை தொடங்கின. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்து திருப்பூருக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தொழிலாளர் பற்றாக்குறை ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. மற்ற தொழிலாளரை விட ஓவர்லாக், பிளாட்லாக் டெய்லர் தேவை அதிகரித்துள்ளது.
சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் கூட டெய்லர் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் வாரம் முழுவதும் வேலைக்கு வருவதில்லை. இதனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் டெய்லர்களை கவர்ந்திழுக்க புதுமையான பரிசுகளை அறிவித்து விளம்பரப்படுத்தி வருகின்றன.
சமீபத்தில் ஒரு நிறுவனம், வாரம் முழுவதும் வேலை செய்தால் ஓவர்லாக் டெய்லருக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என, விளம்பரப்படுத்தியது.
தற்போது மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி நிறுவனம் தற்போது, ஓவர் லாக் டெய்லர் தேவை, வருடம் முழுவதும் வருபவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என விளம்பர போர்டுகளை பல இடங்களில் வைத்துள்ளது. இதுகுறித்து விளம்பரம் வைத்துள்ள நிறுவன பிரதிநிதி கூறியதாவது:-
பெரும்பாலான டெய்லர்களிடம் மது குடிக்கும் பழக்கம் உள்ளது. வார கடைசியில் மூன்று நாட்கள் மட்டுமே பணிக்கு வருகின்றனர். தற்போது ஆர்டர்கள் அதிகளவில் உள்ளன. டெய்லர்கள் முறையாக பணிக்கு வந்தால் மட்டுமே உற்பத்தியை முடிக்க முடியும்.
லாபத்தில் சிறு பகுதியை கூட வழங்கலாம் என முடிவு செய்து ஆண்டு முழுவதும் வேலைக்கு வரும் டெய்லருக்கு, ‘தங்க மோதிரம்‘ வழங்கப்படும் என அறிவித்தோம். இருந்தாலும் பெரிதாக யாரும் முன்வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.