உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் படித்த மாணவன் நவீன்ராஜ்.

பட்டுக்கோட்டை பகுதி அரசு பள்ளி மாணவனின் மருத்துவ கனவை நனவாக்கிய இடஒதுக்கீடு

Published On 2022-01-30 06:50 GMT   |   Update On 2022-01-30 06:50 GMT
பட்டுக்கோட்டை பகுதி அரசு பள்ளி மாணவர் திருச்சி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே உள்ள பாதிரங்கோட்டை வடக்கு பகுதியை சேர்ந்தவர் மாணவர் நவீன்ராஜ், இவர் கடந்த 2006 ஆண்டு முதல் 
2014 ஆண்டு வரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கெள்ளுக்காடு 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 2015-2018 கல்வி ஆண்டில் 
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனந்த கோபாலபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பயின்றுள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்ற நீட்தேர்வில் 150 மதிப்பெண் 
எடுத்துள்ளார். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக்கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. 

தனது மருத்துவ கனவை நனவாக்க வேண்டும் என்ற தீவிர 
முயற்சியில் கடந்த 2018-19 திருச்சியில் உள்ள தனியார் நீட் தேர்வு 
பயிற்சி மையத்தில் 1 ஆண்டு படித்துள்ளார், அந்த ஆண்டு 
நீட் தேர்வில் 272 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்த முறையும் 
மாணவன் நவீன்ராஜ்க்கு அரசு மருத்துவக்கல்லூரியில் 
இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் திருச்சி அரசு மருத்தவக்கல்லூரியில் பிஎஸ்சி ரெடியோதெரபி பிரிவில் சேர்ந்து 
பயின்று வந்துள்ளார். இருந்த போதிலும் தனது 
மருத்துவப்படிப்பிற்கான கனவை நனவாக்க தொடர் 
முயற்சியாக எந்தபயிற்சி மையத்திற்கும் செல்லாமல் 
தீவிரமாக நீட் தேர்விற்காக படித்துவந்துள்ளார். 

இதன் பயனாக 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 340 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மதிப்பெண்ணும் அரசின் 7.5 சதவீத இட 
ஒதுக்கீட்டின் பயனாக திருச்சி மருத்துவக்கல்லூரியில் அரசு 
ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.

இது குறித்து மாணவன் ப.நவீன்ராஜ் கூறுகையில்: நான் 
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 450 மதிப்பெண் எடுத்தேன், 12-ம் வகுப்பில் 
996 மதிப்பெண் எடுத்தேன். 

அந்த ஆண்டு நீட் தேர்வில் 150 மதிப்பெண் எடுத்தேன், 
அப்போது அரசின் 7.5 இடஒதுக்கீடு கிடையாது. ஆகையால் எனக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை, எனது கனவான மருத்துவராக வேண்டும் என்ற எனது கனவுக்காக தொடர்ந்து 
படித்து வந்தேன், இந்த ஆண்டு நீட் தேர்வில் 340 மதிப்பெண் பெற்றேன்.

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனாக தரப்பட்டியலில் 
பொதுப்பிரிவில் 94 இடத்திலும், எம்பிசி பிரிவில் 37-வது இடத்திலும் வந்துள்ளேன். எனக்கு தற்போது திருச்சி அரசு மருத்தவக்கல்லூரியில் 
இடம் கிடைத்துள்ளது. எனது தாய்-தந்தை விவசாயம் 
செய்து வருகிறார்கள். 

எங்கள் கிராமத்தில் நான் தான் முதல் மருத்துவ மாணவன் என்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

Similar News